இதுவரை எந்தெந்த அமெரிக்க அதிபர்கள் இந்தியா வந்துள்ளார்கள்

1959-இல் அப்போதைய அமெரிக்க அதிபர் ட்வைட் டி ஐசனாவர் டெல்லி வந்து பிரமர் ஜவஹர்லால் நேருவைச் சந்தித்ததுடன் நாடாளுமன்றத்திலும் உரையாற்றினார். அமெரிக்கா - ரஷ்யா இடையே பணிப்போர் நீடித்த நிலையில், அணிசேரா இயக்கத்திற்கு தலைமை ஏற்றிருந்த இந்தியாவை அமெரிக்க ஆதரவு நாடாகக் காட்டிக்கொள்ள இந்தச் சந்திப்பு உதவியது.


1969-இல் டெல்லி வந்த அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசினார். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு சிக்கலானதாக இருந்தநிலையில் பிரச்சனையைப் பேசித் தீர்க்க அவர் அறிவுறுத்தினார்.

மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது இந்தியா வந்து அவரைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டருக்கு அந்த பயணம் வெற்றிகரமானதாக இல்லை. ஏனெனில், அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்துவிட்டது.

22 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன், குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனை சந்தித்துப் பேசினார். இவரின் 6 நாட்கள் பயணமே, அமெரிக்க அதிபர் ஒருவரின் அதிகநாள் இந்தியப் பயணமாக அமைந்தது.மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் வந்த அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ், அமெரிக்க - இந்திய சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றார்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது டெல்லி வந்த அதிபர் பராக் ஒபாமா, ஐநா சபையில் இந்தியா நிரந்தர இடம் பெற ஆதரவளித்தார். நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் குடியரசு தினத்தின் சிறப்பு விருந்தினராக வருகை தந்த அவர், அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் சிக்கலைத் தீர்க்கும் வகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறிச் சென்றார். ட்ரம்ப் அதிபரான பின் பிரதமர் நரேந்திர மோடியை இதுவரை 7 முறை சந்தித்துப் பேசியிருந்தபோதும், இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.