ஆட்டோமொபைல் துறையில் மந்தநிலை நீடித்ததால் தொடர்ந்து உற்பத்தியைக் குறைத்துவந்த மாருதி சுஸுகி நிறுவனம், நவம்பர் மாதத்தில் மீண்டும் தனது உற்பத்தியை உயர்த்தியுள்ளது.
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே இந்திய ஆட்டோமொபைல் துறை கடுமையான நெருக்கடியைச் சந்தித்துள்ளது. உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு, பொருளாதார மந்தநிலையால் தேவை குறைவு, அதிக வரி விகிதம்,
வாகன எஞ்சின் விதிமுறைகள், வேலையிழப்புகள் போன்ற பல பிரச்சினைகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சந்தித்துள்ளன. வாகன விற்பனை மந்தமாக இருந்ததால் ஒவ்வொரு மாதமும் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியைக் குறைத்து வருகின்றன.
இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியும் தனது உற்பத்தியைக் குறைத்து வந்தது.
தொடர்ந்து ஒன்பது மாதங்களாகக் குறைத்து வந்தநிலையில், நவம்பர் மாதத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் உற்பத்தி அளவு 4.33 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் மொத்தம் 1,35,946 வாகனங்களை மாருதி சுஸுகி உற்பத்தி செய்துள்ளது. 2018ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் மொத்தம் 1,35,946 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருந்தன.